ஆக்கபூர்வமான அணுசக்தித் திட்டங்களுக்கு உதவி பெறும் வகையில் சர்வதேச நாடுகளுடன் இந்தியா வைத்துக்கொள்ள விரும்பும் நல்லுறவுகளுக்கு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கத் தயாராக உள்ளோம் என்று சீனா கூறியுள்ளது.
ஆசியான் மாநாட்டிற்காக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், சீனாவின் பிரதமர் வென் ஜியாபாவோவைச் சந்தித்துப் பேசினார். அப்போது, எரிசக்தி பாதுகாப்பு, பொருளாதாரம், பருவநிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய ஆலோசனைகள் நடந்தன.
''இந்தியாவுடன் சர்வதேச நாடுகள் மேற்கொள்ள விரும்பும் அணுசக்தி ஒத்துழைப்பு திட்டங்களுக்கு சீனா ஆதரவாக இருக்கும் என்ற கருத்தை அந்நாட்டு பிரதமர் வென் ஜியாபாவோ தெரிவித்தார்'' என்று மத்திய அயலுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சார்ணா கூறினார்.
அதேபோல எல்லைச் சிக்கலில் வெளிப்படையான, காரணமுள்ள, இருதரப்பும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வைக் காண்பதற்கு இருநாட்டுப் பிரதமர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்விவகாரத்தில், இருநாட்டுச் சிறப்புப் பிரதிநிதிகள் குழு நடத்தி வரும் பேச்சுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என்றும் அவர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.