செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு உதவிசெய்யும் வகையில் அமெரிக்கா கொடுத்த நிதியில் பெரும்பகுதியை இந்தியாவிற்கு எதிராக ஆயுதங்களைக் குவிப்பதற்கு பாகிஸ்தான் செலவிட்டுள்ளது என்று திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா நடத்தும் போருக்கு உதவுவதாக பாகிஸ்தான் உறுதியளித்தது.
அதனடிப்படையில் ஆப்கனில் போரிடும் அமெரிக்க ராணுவத்தினருக்கு உதவுவதற்காகவும், பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்திற்கு 80,000 ராணுவத்தினரை அனுப்புவதற்காகவும் 10 பில்லியன் டாலர்களை உதவியாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுத்துள்ளது.
இந்த நிதியில் பெரும்பகுதியை இந்தியாவிற்கு எதிராக அதிநவீன ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்காகவே பாகிஸ்தான் பயன்படுத்தி உள்ளது என்று அமெரிக்காவைச் சேர்ந்த சி.எஸ்.ஐ.எஸ். என்ற ஆய்வு அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சி.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் மூத்த ஆலோசகர் ஃபிரேட்ரிக் பார்ட்டன், ''பாகிஸ்தானுக்கு ராணுவ உதவியாக அளித்துள்ள நிதியை அந்நாடு முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளது. எஃப்-16 விமானங்கள் போன்ற அதிநவீன தளவாடங்களை வாங்கியுள்ளது'' என்று கூறியுள்ளார்.
''பாகிஸ்தான் வாங்கியுள்ள ஆயுதங்கள் நவீனமானவை. அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் பதுங்கியிருக்கும் அல் காய்டா பயங்கரவாதிகளை அழிப்பதற்கு இவை மிக அதிகம். தலிபான்கள், அல் காய்டா பயங்கரவாதிகளின் சக்தி சிறிய அளவில்தான் உள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரைவிட இந்தியாவிற்கு எதிராக ஆயுதங்களைக் குவிப்பதில்தான் பாகிஸ்தான் உறுதியாக உள்ளது. எனவே அந்நாட்டுடன் உள்ள உறவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என்றார் ஃபிரேட்ரிக் கார்டன்.