பாகிஸ்தானில் ஸ்வாத், சங்லா பள்ளத்தாக்கு பகுதிகளில் இன்று காலை நடந்த கடுமையான மோதலில் 28 தலிபான்கள் கொல்லப்பட்டனர் என்று அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
ஆஃப்கான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வடமேற்கு பகுதிகளில் தலிபான்களின் ஆதிக்கம் நிலவுகிறது. அவர்கள் ராணுவத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை ஸ்வாத் ஆற்றங்கரைப் பகுதிகளில் உள்ள தலிபான்களின் மறைவிடங்களின் மீது ராணுவத்தினர் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
இதில் 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், 15 பேர் படுகாயமடைந்தனர் என்று ராணுவம் கூறியுள்ளது. ராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டதாக தலிபான்கள் கூறியுள்ளனர். அப்பகுதியில் சண்டை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையில், சங்லா பகுதியில் நடந்த மோதலில் 16 தலிபான்கள் கொல்லப்பட்டனர், 12 பேர் காயமடைந்தனர் என்றும் அங்கிருந்த தலிபான்கள் அனைவரும் பெலே பாபா என்ற பகுதிக்கு விரட்டப்பட்டு விட்டனர் என்று ராணுவம் கூறியது.