பாகிஸ்தானில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கான பொதுத் தேர்தல் வரும் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் காசி முகமது ஃபரூக், நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி வெளிப்படையான முறையில் நடக்கும். அதே நாளில் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களும் நடத்தப்படும் என்றார்.
''தேர்தல் வெளிப்படையான முறையில் சுதந்திரமாக நடப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஊடுருவிப் பார்க்கும் வகையிலான வாக்குப் பெட்டிகள் தேர்தலில் பயன்படுத்தப்படும்.
சர்வதேச நாடுகளின் கவனம் முழுவதும் பாகிஸ்தான் தேர்தல் மீது இருக்கும் என்பதால், உலகத் தரத்திற்கு ஏற்றவாறு தேர்தல் அலுவலர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தலைப் பார்வையிடுவதற்கு வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். அவர்கள் வாக்குச் சாவடிகளைப் பார்வையிடலாம். அவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் செய்து தரப்படும்'' என்றார் முகமது ஃபரூக்.
தேர்தல் அட்டவணைப்படி நாளை முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வருகிற 26 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். இறுதிப் பட்டியல் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியிடப்படும்.