கிழக்கு சவுதி அரேபியாவில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 28 பேர் பலியானார்கள். இதில் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.
சவுதி அரேபியாவில் ஹாவியா என்ற இடத்தில் காங்லோமெரேட் அராம்கோ என்ற எரிவாயு சேகரிப்பு ஆலை இயங்கி வருகிறது.
இந்த ஆலையில் எரிவாயுக் குழாய்களைப் பராமரிக்கும் பணிகள் நடந்து வந்தன. புதிய குழாயைப் பொருத்துகின்ற பணியில் ஏராளமான இந்தியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் ஹாவியாவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஹராத் உத்மானியா என்ற புதிய எரிவாயுக் குழாய் திடீரென்று வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் சிக்கிய அராம்கோ நிறுவனத்தின் அதிகாரிகள் உள்பட 28 பேர் நிகழ்விடத்திலேயே இறந்தனர் என்று அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
இதில் எத்தனை பேர் இந்தியர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அதே நேரத்தில் ஒருவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்று இந்தியத் தூதரகத் துணைத் தலைவர் ராஜீவ் சாஹர் கூறினார்.
இறந்தவர்களின் நாடுகள் பற்றிய விவரம் குறித்து எதையும் உடனடியாகத் தெரிவிக்க அராம்கோ நிறுவனம் மறுத்து விட்டது.
''விபத்துபற்றி விசாரணை நடத்த உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களை அடையாளம் காணத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன'' என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.