வங்கக்கடலில் உருவான பயங்கரப் புயல் கரையைக் கடந்தபோது வங்கதேசத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
வங்கக்கடலில் அந்தமான் தீவுகள் அருகில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானது. பின்னர் இது அதிதீவிரப் புயலாக மாறியது.
இந்தப் புயல் வடகிழக்கு நோக்கி நகர்ந்து நேற்று நள்ளிரவில் வங்கதேசத்திற்கு அருகில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 240 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. கடல் அலைகள் 5 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு எழுந்தன.
'சிதிர்' (SIDHIR) என்றழைக்கப்படும் இந்தப் புயலால் வங்கதேசத்தின் கடற்கரையோரத்தில் உள்ள 15 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் புயலில் சிக்கித் தரைமட்டமானது. மிகப்பெரிய மரங்களும் அடியோடு சாய்ந்து விழுந்தன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக பாரிசால், பர்குனா, பட்டுகாலி, பாகெர்காட், போலா, சட்கிரா ஆகிய மாவட்டங்களில் இருந்து 258 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலான பகுதிகளில் மின்சாரமும், தகவல் தொடர்பு வசதிகளும் முழுமையாகத் துண்டிக்கப்பட்டு உள்ளதால் மீட்புப் பணிகளின் விவரம் தெரியவில்லை. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில் கடற்கரை மாவட்டங்களில் இருந்து கடலுக்குச் சென்ற 100க்கும் மேற்பட்ட படகுகள் இன்னமும் கரைக்குத் திரும்பவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் எவ்வளவு மீனவர்கள் இருந்தனர் என்ற விவரம் தெரியவில்லை.