வரும் 22-ஆம் தேதிக்குள் அவசர நிலையை திரும்ப பெறுவதுடன், அரசியல் சாசனத்தை மீண்டும் கொண்டு வருவதுடன், ராணுவ தளபதி பொறுப்பிலிருந்தும் முஷாரஃப் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் காமன்வெல்த் அமைப்பில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்படும் என்று காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 5 மணி நேரம் தொடர்ந்து நடைப்பெற்ற காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் அயலுறவுத்துறை அமைச்சர்கள் நடவடிக்கைக் குழுக் கூட்டம் மால்டா மைக்கேல் ஃபெர்னாண்டஸ் தலைமையில் நடந்தது.
இதில்ஒப்புக் கொண்டபடி ராணுவ தளபதி பொறுப்பில் இருந்து முஷாரஃபை விலக கோருவது, உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள்-ஊடகங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக விடுதலைச் செய்வது, தனியார் ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை உடனடியாக விலக்கிக் கொள்வது, நேர்மையாகவும், நியாயமான வகையிலும் தேர்தலை நடத்தக் கூடிய சூழ்நிலையை பாகிஸ்தானில் கொண்டு வருவது உட்பட 5 முக்கிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் வரும் 22-ஆம் தேதிக்குள் மேற்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் அதனை கூட்டமைப்பில் இருந்து நீக்குவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அதில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மால்டா டைக்கேல் ஃபெர்னாண்டோ, வரும் 22-ஆம் தேதி மீண்டும் கூட உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் ஒத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்த அவர், அன்று பாகிஸ்தான் குறித்து மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பு கூறியவற்றை செயல்படுத்தாமல் இருக்கும் நிலையில் இஸ்லாமாபாத் காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் நீக்கி வைக்கப்படும் என்று கூறினார். மேலும் அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படும் நிலையில் பாகிஸ்தான் வரும் 23-ஆம் தேதி கம்பாலாவில் நடைபெறவுள்ள சோகெம்மிலும் பங்கேற்க இயலாது என்று அவர் பாகிஸ்தானை எச்சரித்தார்.