பெனாசீர் பூட்டோ மீண்டும் 7 நாள் வீட்டுக்காவலில் இன்று சிறை வைக்கப்பட்டார்.
பாகிஸ்தானில் அவசர நிலையை அமல்படுத்தியதைக் கண்டித்து இன்று லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியை பெனாசீர் நடத்த இருந்தார். இதற்காக அவர் புறப்படும் போது அங்கு வந்த காவல் துறையினர் அவரை வீட்டுக் காவலில் 7 நாட்கள் கைது செய்வதற்கான உத்தரவைக் கொடுத்து கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர்.
இந்த உத்தரவு பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பிறப்பிக்கப் பட்டுள்ளது. அவசர நிலைக்கால ஒழுங்கு முறைப்படி அங்கு அனைத்து அரசியல் கட்சி பேரணிகளுக்கும் பஞ்சாப் மாகாணம் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பித்திருந்தது. பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் லத்தீப் வீட்டில் பெனாசீர் தற்போது தங்கி இருப்பதால் அவரைக் கைது செய்வதற்கான உத்தரவைக் லத்தீப் கோசாவிடம் காவல் துறையினர் முன்னதாக வழங்கினர்.
பஞ்சாப் மாகாண அரசு பேரணி நடத்த தடை விதித்து இருந்த நிலையிலும், அம் மாகாணத்தில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் அனைவரும், பாகிஸ்தானில் அவசர நிலையை முஷாரஃப் ரத்து செய்யும் வகையில் அடுத்த 3 நாட்களுக்கு போராட்டத்தை தீவிரப் படுத்த நேற்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பேரணியின் போது அவரை மனித தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி கொல்ல திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பெனாசீரின் பாதுகாப்பு கருதியே அவரைக் மீண்டும் வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக அம் மாகாண உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நள்ளிரவு முதலே பெனாசீர் தங்கியிருந்த கோசாவின் இல்லத்தை சுற்றிலும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப் பட்டனர்.பொதுமக்களோ, ஊடகங்களைச் சேர்ந்தவர்களோ அவர் தங்கியிருந்த இல்லத்தை அணுக முடியாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டது.
பஞ்சாப் மாகாணம் முழுவதும் காவல் துறையினர் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களைச் ஏற்கனவே கைது செய்தனர். அதேப் போன்று பேரணியில் எங்கெல்லாம் பெனாசீர் உரையாற்றுவதாக இருந்ததோ அப்பகுதியைச் சேர்ந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியினர் அதிக அளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.