Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா - ரஷ்யா - சீனா இடையே ஒத்துழைப்பு : புடின் வலியுறுத்தல்!

இந்தியா - ரஷ்யா - சீனா இடையே ஒத்துழைப்பு : புடின் வலியுறுத்தல்!

Webdunia

, திங்கள், 12 நவம்பர் 2007 (20:22 IST)
இந்தியா - ரஷ்யா - சீனா இடையே நெருங்கிய, விரிவான ஒத்துழைப்பு அவசியம் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார்!

ரஷ்யா சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு இரு தலைவர்களும் செய்தியாளர்களை ஒன்றாகச் சந்தித்துப் பேசியபோது, இந்தியா - ரஷ்யா - சீனா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய விளாடிமிர் புடின்.

அதிபர் புடினின் கருத்தை ஏற்ற பிரதமர் மன்மோகன் சிங், "நாம் அடுத்தடுத்த அண்டை நாடுகள் மட்டுமின்றி, மூவருமே மிகப் பழமையான நாகரீகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நமக்குள் விரிவான ஒத்துழைப்பிற்கான வாய்ப்புக்களை ஆராய்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

பிரதமர் மன்மோகன் சிங்குடன் தான் நடத்திய பேச்சுவார்த்தை வணிக ரீதியிலான ஒரு சூழலில் நடைபெற்றது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 2010 ஆம் ஆண்டிற்குள் 10 பில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்த்துவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக பொருளாதார உறவுகளை மேம்படுத்த கூட்டுப் பணிக்குழுக்கள் அளிக்கும் பரிந்துரைகள் ஆராயப்படும் என்று கூறினார்.

பாதுகாப்புத் துறையிலும், அணு சக்தித் துறையிலும் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பு நிலவி வருவதை இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து பன்முக சரக்கு விமானத்தை ஒன்றிணைந்து உருவாக்கும் ஒப்பந்தம் குறிப்பிடத்தக்கது என்றும் புடின் கூறினார்.

சக்காலின் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு எரிசக்தி வழங்குவதையும் அதிபர் புடின் சுட்டிக்காட்டினார்.

அமைதி நோக்கங்களுக்கான அணு சக்தி ஒத்துழைப்பில் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து செயல்படுகின்றன என்று கூறிய மன்மோகன் சிங், இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச அணு சக்தி முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒத்த கருத்தை உருவாக்க தனது அரசு முயற்சித்து வருவதாகக் கூறினார்.

இரண்டு மணி நேரம் இரு தலைவர்களுக்கும் இடையில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையிலான உறவு மட்டுமின்றி, சர்வதேச நிலைமைகளும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவின் அணு சக்தி திட்டத்திற்கு ஆதரவு தருவதில் ரஷ்யாவின் உறுதியான நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பும், இரு நாடுகளும் இணைந்து 5வது தலைமுறை போர் விமானங்களையும், பன்முக சரக்கு விமான உற்பத்தியிலும் ஈடுபடுவது குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று கூறினார்.

இரு நாடுகளும் தொழில்நுட்பத் துறையில் மேற்கொண்டு வரும் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறிய மன்மோகன் சிங், அதன் வெளிப்பாடே நிலவை ஆராய சந்திராயன்-2 விண்கலத்தை அனுப்பும் திட்டத்தில் ரஷ்யா பங்கேற்பது என்று கூறினார்.

சர்வதேச விவகாரங்களில் ரஷ்யாவின் பங்களிப்பை மிக உயர்வாக மதிப்பதாகவும், முக்கியப் பிரச்சனைகளில் உலகளாவிய அளவில் ரஷ்யாவின் தலைமை முக்கியமானது என்றும் மன்மோகன் சிங் கூறினார்.

புடினை சந்திப்பதற்கு முன்பு ரஷ்ய பிரதமர் விக்டர் சுட்கோவுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். இந்தியாவிற்கு வரவேண்டும் என்று பிரதமர் விடுத்த அழைப்பை ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டார். 2008 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள ரஷ்ய விழாவை துவக்கி வைக்க புடின் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil