பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் அறிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முஷாரஃப், தேர்தல் நடத்துவதற்கு ஏற்ற வகையில் வருகிற 15 ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும், பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மாநிலங்களின் சட்டப் பேரவைகள் வருகிற 20 ஆம் தேதி கலைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
''நாடாளுமன்றம், சட்டப் பேரவைகளுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்தப்படும். அதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல மத்தியில் வருகிற 15 ஆம் தேதியும், மாநிலங்களில் 20 ஆம் தேதியும் இடைக்கால அரசுகள் பதவி ஏற்றுக் கொள்ளும்'' என்றார் முஷாரஃப்.
எப்போது ராணுவத் தளபதி பதவியை விட்டு விலகுவீர்கள் என்று கேட்டதற்கு, அனேகமாக வருகிற 15 ஆம் தேதி என்றார்.
மேலும், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும். அதன்படி நான் பதவி விலகும் நிகழ்வு நடக்கும் என்றும் முஷாரஃப் கூறினார்.