இலங்கையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் யானைகளைப் பாதுகாத்து, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறிலங்கா அரசு முடிவு செய்துள்ளது.
அயல்நாடுகளில் பின்பற்றப்படும் புதிய நவீன செயற்கைக் கருவூட்டல் முறையை சிறிலங்க வல்லுநர்கள் கையாளவுள்ளனர்.
இலங்கையில் உள்ள அடர்ந்த காடுகளில் 10,000 க்கும் அதிகமான யானைகள் வசித்து வந்தன. தற்போது பருவநிலை மாற்ற பாதிப்பு, காடுகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் யானைகளின் எண்ணிக்கை 3,000 மாகக் குறைந்து விட்டது.
எனவே இலங்கையில் அடந்த காடுகள் வேகமாக அழிந்து வரும் நிலையில் அதில் வசிக்கும் யானைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது.
கண்டி அருகில் உள்ள பின்னவெல என்ற இடத்தில் யானைகள் காப்பகம் ஒன்று உருவாக்கப்பட்டது. இங்குள்ள ஆய்வுக் கூடத்தில் கடந்த 1984 ஆம் ஆண்டு முதன் முறையாக யானை ஒன்று குட்டி ஈன்றது. இதுவரை 40 குட்டிகள் இக்காப்பகத்தில் பிறந்துள்ளன.
இந்நிலையில், செயற்கைக் கருவூட்டல் முறையில் யானைகளின் பிறப்பை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தாய்லாந்து வல்லுநர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளது.
பின்னவெல காப்பகத்தைச் சேர்ந்த வல்லுநர்கள் தாய்லாந்தில் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் சிறிலங்கா திரும்பியவுடன் செயற்கைக் கருவூட்டல் முறையில் யானைகளை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.
யானைகளின் உயிரணுக்களைச் சேமித்து வைப்பதற்கான நவீன இயந்திரங்களை வாங்கவும் அரசு முடிவு செய்துள்ளது என்று காப்பகத்தின் இயக்குநர் சந்தனா ராஜபக்ச தெரிவித்தார்.
கடந்த 1975 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் காப்பகத்தில் முதலில் 7 யானைகளே இருந்தன. முதலில் தனியாகத் தத்தளிக்கும் குட்டி யானைகள் மீட்கப்பட்டு, வளர்க்கப்பட்டு மீண்டும் காட்டிலேயே கொண்டுவிடப்பட்டன.
தற்போது, இங்கு 40 ஆண் யானைகள் உள்பட 82 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 3 மாதமே ஆன குட்டி முதல் 65 வயதான யானை வரை எல்லா வயது யானைகளும் இங்கு பராமரிக்கப்படுகின்றன.
சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் பரவிக் விடக்கும் இந்த யானைகள் காப்பகம் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக மாறிவிட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
காப்பகத்தில் உள்ள குட்டி யானைகளுக்கு உணவு ஊட்டுவதும், அவற்றுடன் விளையாடுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த விடயமாக இருக்கிறது.
இங்குள்ள யானைகளை காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை சுமார் 500 மீட்டர் தொலைவில் உள்ள மா ஓயா ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுகிறார்கள். இதைக் காணவும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் குவிகின்றனர்.