பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடணம் செய்ததன் மூலம் அரசியல் ரீதியாக தனக்குத் தானே தற்கொலைத் தாக்குதல் ஒன்றினை முசாரஃப் செய்து கொண்டுவிட்டார் என்று பாகிஸ்தானுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் வெண்டி சேம்பர்லேன் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் சனநாயக நடைமுறைகளை நசுக்குவதில் முசாரஃப் தனது முன்னோர்களின் பண்பு நலன்களை அப்படியே எதிரொலித்துள்ளார். அதே போன்று அவரின் அரசியல் நம்பகத்தன்மையையும் பட்டவர்த்தனமாக்கியுள்ளார் என்று ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக் கழகத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசும் போது வெண்டி சேம்பர்லேன் கூறினார். இது அவரே தனக்கு நிகழ்த்திக்கொண்ட ஒர் படுகொலை என்றும் அவர் கூறினார்.
கடந்த 2001-02 -ஆம் ஆண்டுகளில் தாம் அங்கு பணியாற்றிய போது இருந்ததைப் போல முசாரஃப் தற்போது இல்லை என்றும், தகுந்த ஆலோசனைகள் வழங்க கூட இயலாத தொலைவில் உள்ளார் என்றும் கூறினார். அறிவுபூர்வமற்ற, உறுதியற்ற நடவடிக்கைகளால் முசாரஃப்புக்கு எந்த பலனும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்,
ஜனநாயகத்தில் கீறல்களை உருவாக்கிவிட்டு, சட்டத்திற்கு அப்பாற்பட்டு தனது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்ள அமெரிக்காவின் ஆதரவை எதிர்நோக்குவதாகவும், ஆபத்தான தனது பண்புகளை மறைத்தவிட்டு அமெரிக்காவுடன் உறவு வைத்துக் கொள்ள விழைவதாகவும் கூறினார்.
எந்தவொரு தனி மனிதருடனோ, விருப்பம் உள்ள கட்சியோடனோ, இராணுவத்தோடோ உறவு இல்லை என்பதையும், மக்களோடுதான் உறவு என்பதையும் அமெரிக்கா தெளிவாக உறுதிபட அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.