Publish Date: Fri, 09 Nov 2007 (18:33 IST)
Updated Date: Fri, 09 Nov 2007 (18:32 IST)
பாகிஸ்தானில் தாலிபான்களிடம் 200 துணை ராணுவத்தினர் சரணடைந்துள்ளனர்.
ஆப்கன் எல்லையில் உள்ள வடமேற்கு பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதிகள் தாலிபான்களின் ஆதிக்கத்தில் உள்ளது. அவர்கள் அங்குள்ள அரசமைப்புகளை இயங்கவிடாமல் தடுத்து வருகின்றனர்.
இஸ்லாமிய மதச் சட்டங்களின்படி தான் ஆட்சி நடத்த வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்ட தாலிபான்களின் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பலவும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
பழங்குடியினர் அதிகம் வசிக்கும் மட்டா என்ற கிராமத்தில் உள்ள துணை ராணுவத்தினரின் முகாமை இஸ்லாமிய மதகுரு மெளலானா ஃபாசுல்லா தலைமையிலான தாலிபான்கள் சுற்றிவளைத்தனர்.
அவர்களை எதிர்த்துப் போராட முடியாத நிலையில் சிக்கிக் கொண்ட 200 ராணுவத்தினர் தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்துச் சரணடைந்ததாகஅந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், முல்லா வானொலி என்ற பெயரில் ரகசிய பண்பலை ஒளிபரப்பை நடத்திவரும் மதகுரு ஃபாசுல்லாவின் அடியாட்கள்தான் ராணுவத்தினரைக் கடத்திச் சென்றுள்ளனர் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்வாத் பள்ளத்தாக்குப் பகுதியின் 80 விழுக்காடு தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்குள்ள காவல்நிலையங்கள், அரசு அலுவலகங்களில் பறக்கும் பாகிஸ்தானின் தேசியக் கொடிகளை இறக்கிவிட்டு குரானின் கருத்துகள் பொறிக்கப்பட்ட தங்களின் கொடிகளை ஏற்றியுள்ளனர்.