பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் விடுத்துள்ள அறிவிப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப், தனது ராணுவத் தளபதி பதவியுடன் அதிபர் பதவியிலும் தொடர்ந்து நீடிக்க அவசரநிலையைக் கொண்டு வந்தார்.
”நீதித்துறையின் அத்துமீறலும், பயங்கரவாத இயக்கங்களின் அதீத வளர்ச்சியுமே அவசரநிலையைப் பிரகடனம் செய்யக் காரணம்” என்று முஷாரஃப் விளக்கமளித்தார்.
ஆனால், முஷாரஃப்பின் முடிவுக்கு எதிர்க்கட்சிகளும், அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தன.
இந்நிலையில், பாகிஸ்தானில் அவசரநிலை நீக்கப்பட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்று முஷாரஃப் அறிவித்துள்ளார்.
இம்முடிவை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
அதேநேரத்தில், பொதுத் தேர்தலை நடத்தினால் மட்டும் போதாது, முஷாரஃப் முன்பு அறிவித்தபடி தனது ராணுவத் தளபதி பதவியை விட்டுவிலக வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
''முஷாரஃப்பின் அறிவிப்பு ஆக்கமளிக்கும் நடவடிக்கை என்றாலும் பாகிஸ்தானில் ஜனநாயகமான முறையில் சட்டத்தின் ஆட்சி அமைய இன்னும் சில முக்கியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியம்.
முஷாரஃப் தனது ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகுவது அதில் முக்கியமான ஒன்று'' என்று அமெரிக்க அயலுறவு செய்தித் தொடர்பாளர் ஷான் மெக்கார்மக் கூறியுள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், முஷாரஃப்பைத் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேர்தல் தேதியை முடிவு செய்யுமாறும், ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகுமாறும் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.