கடல் பகுதியை கண்காணிக்க அதி நவீன ராடார், ஏராளமான நவீன இலகு வகைப் படகுகள் ஆகியவற்றை சிறலங்கக் கடற்படைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
சிறிலங்காவிற்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ள இந்த உதவிகளை திரிகோணமலை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் சிறிலங்க கடற்படைத் துணைத் தளபதி வஸந்த கரணாகோடவிடம் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் வழங்கினார்.
அப்போது ''கடலில் நடைபெறும் கடத்தல்களைக் கண்காணித்துக் கட்டுப்படுத்துவதில் சிறிலங்க கடற்படையின் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் படகுகளும், தொழிநுட்ப வசதியும் வழங்கப்பட்டுள்ளன'' என்று ராபர்ட் கூறினார்.
”கடந்த 1997ஆம் ஆண்டு அயல்நாட்டு பயங்கரவாத இயக்கமாக அமெரிக்க அரசினால் அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் தங்களுக்குத் தேவையான ஆயுதங்களைக் கடல்வழியாகக் கடத்துவது அதிகரித்து வருகிறது.
எனவே உலகளவில் பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு உதவுவது என்ற கொள்கையின் அடிப்படையில் சிறிலங்காவிற்குத் தேவையான கடற்படை உதவிகளை அமெரிக்கா தனது பாதுகாப்புச் சட்டப்படி வழங்கியுள்ளது.
சிறிலங்காவில் நடைபெறும் இனப் பிரச்சனைகளுக்கு விரைவாக அரசியல் தீர்வு காணும் வகையில் பேச்சுகள் நடத்தப்பட வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்” என்றார் ராபர்ட் ஓ பிளேக்.