அமெரிக்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள 2008 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பாகிஸ்தானிற்கு உதவியாக அளிக்கும் வகையில் 845 மில்லியன் டாலர் ஒதுக்குமாறு சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகவாண்மை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதில், பயங்கரவாத எதிர்ப்பு, போதைப் பொருள் ஒழிப்பு, சட்ட அமலாக்க மறுசீரமைப்பு, சர்வதேச ராணுவக் கல்வி, பயிற்சி, ராணுவ நிதியுதவி ஆகியவற்றுக்கு சுமார் 342 மில்லியன் டாலர் வழங்கப்படும்.
"எங்களின் 2008 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பாகிஸ்தானுக்கு உதவியாக 785 மில்லியன் டாலரையும், அதே ஆண்டிற்கான துணை ஒதுக்கீடாக 60 மில்லியன டாலரையும் ஒதுக்க ஆலோசனை செய்துள்ளோம்'' என்று அமெரிக்க அரசு தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தனது முக்கியக் கூட்டாளி பாகிஸ்தான் என்று அறிவித்துள்ள அமெரிக்கா முஷாரஃப் அரசுக்கு, கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 10 பில்லியன் டாலருக்கு மேல் உதவியாக வழங்கியுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதால் அமெரிக்கா தனது அனைத்து விதமான உதவிகளையும் மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எப்போது மறுபரிசீலனை செய்யவீர்கள் என்று கேட்டதற்கு, குறிப்பிட்ட காலக்கெடு எதையும் நிர்ணயிக்கவில்லை என்று அமெரிக்க அயலுறவுச் செய்தித் தொடர்பாளர் சென் மெக்கார்மக் தெரிவித்தார்.