காமன்வெல்த் நாடுகளின் செயலாளர் டான்-மெக்-கின்னான் உறுப்பு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டை வரும் திங்கட்கிழமை லண்டனில் அவசரமாக கூட்டியுள்ளார்.
இதில் பாகிஸ்தானில் தற்போது அதிபர் பர்வேஸ் முஷார·ப்பால் கொண்டுவரப்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும் 53 நாடுகள் கூட்டமைப்பான காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து இரண்டாவது முறையாக பாகிஸ்தான் நீக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
சுதந்திரம் என்ற அடிப்படையில் காமன்வெல்த் கூட்டமைப்பிற்கு தற்போது தான்சானியா நாட்டு பிரதிநிதிகள் மூலம் பிரச்சனை எழுந்துள்ளது. காமன்வெல்த் கூட்டமைப்பை கூட்டி பாகிஸ்தானை இரண்டாவது முறையாக நீக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பாகிஸ்தான் பத்து ஆண்டுகள் கூட தனது உத்தரவாதத்தை, ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் மேற்கொள்ள முடியவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து முதன் முறையாக பாகிஸ்தான் கடந்த 1999 ஆம் ஆண்டு தற்போது அதிபராக இருந்த நவாஸ் ஷெரி·ப்பை ரத்தக்களறி இல்லாமல் ராணுவ ஆட்சி மூலம் அப்புறப்படுத்திவிட்டு ஆட்சியை தற்போதைய அதிபர் முஷார·ப் கைப்பற்றியதைத் தொடர்ந்து நீக்கிவைக்கப்பட்டது.
ஆப்பிரிக்க நாடுகள் முஷாரஃப் மீண்டும் ராணுவ ஆட்சியைக் கொண்டு வருவார் என எச்சரித்த நிலையிலும், கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து, தங்களிடம் அதிபர் முஷாரஃப் ராணுவ தளபதி பதவியை துறந்துவிடுவதாக உத்தரவாதம் அளித்திருப்பதாக கூறியிருப்பதாகவும், எனவே மீண்டும் பாகிஸ்தானை காமன்வெல்த் கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்று கூறியதை நம்பி மீண்டும் பாகிஸ்தான் சேர்த்துக்கொள்ளப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து கூறியதை நம்பி ஏமாந்து போனதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பின் புதிய பொதுச் செயலரை கம்பாலாவில் நடைபெறவுள்ள தேர்தலில் தேர்வு செய்ய உள்ள நிலையில் அதில் போட்டியிட பாகிஸ்தான் விரும்புவது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இதனிடையே ஜிம்பாப்வே அதிபராக இருந்த ராபர்ட் முகாபே நேர்மையாகவும், நியாயமாகவும் தேர்தல் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து ஜிம்பாப்வே காமன்வெல்த் அமைப்பில் இருந்து தன்னிச்சையாக விலகியது. தற்போது அதனை மீண்டும் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று ஆப்பிரிக்க நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இது தொடர்பாக ஓர் நல்ல முடிவு எட்ட மாலத் தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கேல் ஃபெர்னாண்டோ உடன் லண்டனுக்கான இந்தியத் தூதர் கமலேஷ் சர்மா இணைந்து செயல்பட்டு வருகிறார்.