பருவ நிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கட்டுப்படுத்தும் விடயத்தில் மூன்றாவது உலகப்போராகக் கருதி போராட வேண்டும் என்று பிரிட்டனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்புகள் அறைகூவல் விடுத்துள்ளன.
லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்றின் செயலர் லேடி யங், சர்வதேச அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு எதிராக நாம் எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் தாமதமானவை என்பதால் அவற்றை கடுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த பல ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திவரும் பருவநிலை மாற்ற பாதிப்புகளுக்கு எதிராக நாம் எடுத்துவரும் நடவடிக்கைகள் அமைதிக்கான உடன்படிக்கைகள் போல உள்ளன. ஆனால் மூன்றாம் உலகப்போரைப் போல நடவடிக்கை எடுக்க வேண்டியதுதான் இப்போது அவசியம்.
உலகம் வெப்பமயமாதலால் கடல்மட்டம் உயர்ந்துள்ளதன் காரணமாக பிரிட்டன் கடற்கரைகளில் 130 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன என்றும் அவர் கூறினார்.
பிரிட்டன் சுற்றுச்சூழல் செயலர் ஹலாரி பென் பேசுகையில், பருவநிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள சவால் மட்டுமல்ல, பாதுகாப்பு, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றுக்கும் ஏற்பட்டுள்ள சவால் என்றார்.