சிறிலங்கா விமானப் படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வனின் உடல், ஆயிரக்கணக்கான மக்களின் அஞ்சலிக்குப் பிறகு மிகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக கிளிநொச்சி நகரில் நேற்று மாலை வைக்கப்பட்டிருந்த சு.ப.தமிழ்செல்வனின் உடலுக்கு அவரின் துணைவியார் இசைச்செல்வி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து தளபதி கர்னல் பால்ராஜ் அஞ்சலி செலுத்தினார்.
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் வீரச்சாவைத் தழுவிய லெப். கர்னல் அன்புமணியின் திருவுருவப்படத்துக்கு அவரின் துணைவியார் யாழ்மதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மேஜர் மிகுதனின் திருவுருவப்படத்துக்கு விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், மேஜர் கலையரசனின் திருவுருவப்படத்துக்கு விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை, லெப். ஆட்சிவேலின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனப்பொறுப்பாளர் கரிகாலன், லெப். மாவைக்குமரனின் திருவுருவப்படத்துக்கு தமிழீழ கல்விக்கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் ஆகியோர் மாலைகளை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இறுதியில், விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாலைகளை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், கிளிநொச்சி நகரிலிருந்து கனகபுரத்திற்கு தமிழ்ச்செல்வனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அப்போது சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் மக்கள் அணிதிரண்டு அஞ்சலி செலுத்தினர்.