Publish Date: Mon, 05 Nov 2007 (19:23 IST)
Updated Date: Mon, 05 Nov 2007 (19:23 IST)
''இலங்கையில் அமைதியை ஏற்படுத்தக் கடந்த 10 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முயற்சிகளில் தமிழ்ச்செல்வன் முக்கியப் பங்கு வகித்தார்'' என்று இலங்கைக்கான நார்வே சிறப்புத் தூதர் ஜான் ஹன்சன் பெளவர் தெரிவித்துள்ளார்.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இனப் பிரச்சனைக்கு சமாதானப் பேச்சுக்களின் மூலம் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்குக் கடந்த 10 ஆண்டுகளாக எடுக்கப்பட்ட முயற்சிகளில் தமிழ்செல்வன் முக்கியப் பங்கு வகித்தார்.
அவரை வைத்துதான் விடுதலைப் புலிகள் பற்றிய கருத்தை நாங்கள் உருவாக்கினோம். புலிகளின் அரசியல்நிலை, கருத்துநிலை பற்றி எங்களுக்குத் தெளிவாக விளக்கிப் புரியவைத்தார்.
தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பொறுமையாக எடுத்துரைத்தார். அவர் ஒரு மென்மையான, அறிவார்ந்த, ஆளுமைமிக்க மனிதர் என்பதை அவருடைய பேச்சின் மூலம் உணர்ந்து கொண்டேன். சிக்கலான சூழ்நிலைகளிலும் உறுதியுடனும், நம்பிக்கையுடனும் தமிழ்செல்வன் செயல்பட்டார்.
பேச்சுக்களின் போது அவர் எப்போதும் கோபத்தை வெளிப்படுத்தியதில்லை. அதேநேரத்தில் நான் அதிகமாகப் பேசிய போது தனது கவலைகளை வெளிப்படுத்தவும் அவர் தயங்கியதில்லை.
நாங்கள் இருவரும் அவரவருக்குரிய பணிகளைத்தான் செய்தோம் என்பதையும், அதற்கான அதிகாரத்தைப் பெற்றிருந்தோம் என்பதையும் இருவருமே அறிந்திருந்தோம்.
ஆண்டன் பாலசிங்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட இடைவெளியை நிரப்பும் வகையில் தமிழ்ச்செல்வன் செயல்பட்டார். கடந்த ஒரு ஆண்டிற்குள் அமைதி முயற்சிகளில் முக்கியப் பங்கு வகித்த ஆண்டன் பாலசிங்கம், தமிழ்ச்செல்வன் ஆகிய இரண்டு பேரையும் இழந்துள்ளோம்.
இலங்கையின் இன்றைய நெருக்கடியான சூழ்நிலையில் தமிழ்ச்செல்வனின் இழப்பு பேரிழப்பாகும். அமைதிக்கான முயற்சியில் அவர் விட்டுச்சென்றுள்ள பணிகளை முன்னெடுப்பதே நாமனைவரும் அவருக்கு அளிக்கக்கூடிய மரியாதையாக அமையும் என்றார் ஜான் ஹன்சன் பெளவர்.
Webdunia
Publish Date: Mon, 05 Nov 2007 (19:23 IST)
Updated Date: Mon, 05 Nov 2007 (19:23 IST)