பாகிஸ்தானில் அவசரநிலையைக் காரணம் காட்டி தொலைக் காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களுக்கு நெருக்கடி அளிப்பதற்கு அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் ஊடகங்கள் தணிக்கைக்குப் பிறகே தங்களின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
இதைக் கண்டித்து அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில், ஜனநாயக முறையில் தேர்தல் விரைவில் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒவ்வொரு குடிமகனிடமும் அமைதியான முறையில் கொண்டுவர வேண்டும். எனவே ஊடகங்கள் தங்களின் வழக்கமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏதுவாக கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
அவசர நிலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வழக்கறிஞர்கள், அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரைக் கைது செய்வது, செய்தி ஊடகங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது போன்ற நடவடிக்கைகளுக்காக ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ''பயங்கரவாத எதிர்ப்புப் போரில் ஒத்துழைப்பதால் பாகிஸ்தானுக்கு நிதியுதவி தருகிறோம். அவசரநிலையை நீக்காவிட்டால் அந்த நிதியுதவியை நிறுத்தும் சூழல் ஏற்படும்'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா ரைஸ் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.