பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என்று பிரதமர் செளகத் அஜீஸ் சூசுகமாகத் தெரிவித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிபர் பர்வேஷ் முஷாரஃப் வலியுறுத்தி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக அதிபர் பர்வேஷ் முஷாரஃப் தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் பிரதமர் செளகத் அஜீஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் செளத்ரி சுஜாத் ஹூசைன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
அவசர நிலையை நீட்டிப்பது, திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் நடத்துவது என்பன உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளில் ஆளும் கூட்டணிக் கட்சிகள் பிளவுபட்டு நின்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.
பொதுத் தேர்தலைத் திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று அதிபர் முஷாரஃப் வலியுறுத்தி உள்ளார். ஆனால், கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தேர்தலை 6 மாதத்திற்குத் தள்ளிப் போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இதனால் பொதுத் தேர்தல் விசயத்தில் இறுதிமுடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், அவசரநிலை தொடரக் கூடாது என்ற விசயத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றுபட்டு நின்றுள்ளன.
இந்த வாரத்தின் இறுதிக்குள் பொதுத் தேர்தல் நடத்துவதில் ஒருமித்த முடிவெடுக்க வாய்ப்புள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு போன்ற மற்ற விவகாரங்களும் இந்த உயர்மட்டக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டன என்று பாகிஸ்தான் நாளிதழ்கள் தெரிவித்துள்ளன.