''தமிழ்செல்வன் மீதான தாக்குதல் அமைதி முயற்சிகளுக்கு விழுந்த அடி'' என்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
சிங்கள ராணுவத்தின் விமானப் படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளுக்கு இரங்கல் தெரிவித்து கிளிநொச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், அவ்வியக்கத்தின் புதிய அரசியல் பிரிவுத் தலைவர் பா.நடேசன் பேசுகையில், ''அமைதி முயற்சிகளின் சின்னத்தின் மீது சிறிலங்கா அரசின் பயங்கரவாதிகள் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்'' என்றார்.
''சு.ப.தமிழ்செல்வனும், மற்ற போராளிகளும் செய்த தியாகங்கள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். அவர்களின் இழப்பால், எல்லோருடைய இதயத்திலும் நமது தேசம் விரைவில் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்ற எழுச்சி ஏற்பட்டிருக்கிறது.
பிரிகேடியர் தமிழ்செல்வன் மீதான தாக்குதல் அமைதி முயற்சிகளுக்கு விழுந்த அடியாகும். சிறிலங்கா அரசின் கோழைத்தனமான செயல்களை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். சிறிலங்கா அரசானது தனது பயங்கரவாத முகத்தினை தமிழர் தேசத்திற்கு மட்டுமல்ல சர்வதேச நாடுகளுக்கும் காட்டி வருகின்றது.
சிறிலங்கா அரசின் பயங்கரவாதத் தன்மையைச் சர்வதேச நாடுகள் விரைவில் புரிந்து கொண்டு எங்களின் சுதந்திரப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும். தமிழீழம் விரைவில் கிடைக்க வேண்டும்'' என்றார் பா. நடேசன்.