தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய அரசியல் பிரிவுத் தலைவராக பி. நடேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சிறிலங்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் சு.ப.தமிழ்செல்வன் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அப்பொறுப்பிற்கு நடேசன் நியமிக்கப்பட்டு உள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. நடேசன் தற்போது தமிழீழக் காவல் துறைப் தலைமைப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இவர், இயக்கத்தின் கருத்தை உலக அரங்கில் எடுத்துரைக்கும் விதமாகவும், அரசியல் ரீதியாக வழி நடத்திச் செல்லும் வகையிலும் தொடர்ந்து பணியாற்றுவார் என்று விடுதலைப்புலிகளின் ராணுவ பேச்சாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மறைந்த தமிழ்செல்வனின் இல்லத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், சிறிலங்க விமானப்படையின் தாக்குதலில் கொல்லப்பட்ட மற்ற போராளிகளின் இல்லங்களுக்கும் சென்று அவர்களின் உறவினர்களோடு இணைந்து அஞ்சலி செலுத்தினார் என்று இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நேற்று நடைபெற்ற தாக்குதலில் கிளிநொச்சியில் கட்டுறரைக்குளம் உள்ளிட்ட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் சிலவற்றைக் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர். அங்கு நடந்த தாக்குதலின் இறுதிவரை தான் அங்கிருந்து பணி புரிந்ததாக ராசா இளந்திரையன் கூறியுள்ளார்.