ஐக்கிய அரபு நாடுகளில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு அயல்நாடுகளில் இருந்து ஏராளமான இளைஞர்கள் ஐக்கிய அரபு நாடுகளுக்குச் சென்று பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் ஆவணங்களின்படி அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளனர். சிலர் போலி ஆவணங்களை வைத்து சொந்தமான வீடுகளை வாங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள அயல்நாட்டவர்கள் வெளியேற இன்று கடைசிநாள் என்று அரசு அறிவித்துள்ளது.
தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர்கள் இன்று முதல் உரிய ஆவணங்கள் இல்லாத அயல்நாட்டவர்களைக் கண்டுபிடித்து அபராதம் விதிப்பார்கள். தேவைப்பட்டால் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சர் அலி பின் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஒப்பந்த விதிகளை மீறுதல், பணி அனுமதிகளைப் புதுப்பிக்கத் தவறுதல், போலி ஆவணங்களின் மூலம் தொழிலாளர்களைக் கடத்தி வருதல் போன்றவை அயல்நாட்டவர்கள் செய்யும் முக்கியக் குற்றங்களாகும். இதற்குச் சில அதிகாரிகளும் உடந்தை.
தவறு செய்துள்ள நிறுவனங்களின் மீது உரிமங்களை ரத்து செய்தல், பணி அனுமதிகளைத் தடை செய்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்பு கேட்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் அப்துல்லா தெரிவித்தார்.