பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகலாம் என்பதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்படலாம் என்ற கருத்தை அந்நாட்டு அமைச்சர் ஷெர் ஆஃப்கன் நியாசி மறுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஷெர் ஆஃப்கன் நியாசி, ''பொதுத் தேர்தல் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாடு நெருக்கடி நிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பதெல்லாம் வெறும் புரளி'' என்றார்.
ரயில்வே அமைச்சரும், முஷாரஃப்பின் நெருங்கிய நண்பருமான ஷேக் ரஷீத் அகமது, இந்த நேரத்தில் நெருக்கடி நிலையை அமல்படுத்த சட்டத்தில் இடமில்லை என்றார்.
அதேநேரத்தில் பொதுத் தேர்தலை தள்ளிவைக்க சட்டத்தில் இடமிருக்கிறதா என்று ஆளுகின்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பதை அமைச்சர் அகமது ஒப்புக் கொண்டார்.