இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் மோதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என்று உலக வங்கி அறிவித்துள்ளது.
கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக வங்கியின் தலைவர் கிரேமி வீலர், இனப் பிரச்சனையால் சிறிலங்கா மக்களுக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றார்.
அதிகளவிலான கடத்தல்கள், படுகொலைகள், காணாமல் போதல்கள், சட்டச் சீர்குலைவுகள போன்ற பிரச்சனைகள் பற்றி ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஆர்பர் தெரிவித்த கருத்துகள் எங்களின் கவனத்திற்கு வந்துள்ளன.
இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப நினைக்கும் மக்கள் கடுமையான சவால்களைச் சந்திப்பதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன். கிழக்கு உள்ளிட்ட மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை உலக வங்கி உறுதியாக வழங்கும்.
உலக வங்கியால் செயல்படுத்தப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது இன ஒதுக்கல், பாரபட்சம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும். எல்லா இன மக்களும் ஒற்றுமையாக பலன்களைப் பெறவேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.
இலங்கையின் கிழக்கு, வடக்குப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருந்தது. இப்போது கிழக்கில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் சூழலும், வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
இனப் பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றும் கிரேமி வீலர் தெரிவித்தார்.