குடும்பத்தினரைச் சந்திப்பதற்காக துபாய் சென்றுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டொ, நாடு திரும்பாமல் இருப்பதே நல்லது என்று அவருடைய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட அதிபர் முஷாரஃப்பிற்குத் தகுதியுள்ளதா என்று கேட்டுத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் வருகின்ற 12-ஆம் தேதி தீர்ப்பு வழங்கவுள்ளது.
எனவே, தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டில் அவசர நிலையைக் கொண்டுவர அதிபர் முஷாரஃப் முயற்சிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அங்குள்ள கட்சிகளிடையில் உருவாகியுள்ளது.
அவசர நிலையைப் பயன்படுத்தி பெனாசீர் மீது தாக்குதல் நடத்த எதிரிகள் முயற்சிக்கக் கூடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் அரசியல் நெருக்கடியில் சிக்கிக் குழப்பத்தில் இருந்த பெனாசீர், நேற்று மதியம் துபாய் சென்றார். தனது குழந்தைகளையும், தாயையும் பார்ப்பதற்காகச் செல்வதாக அவர் தெரிவித்தார்.
பெனாசீர் வருகிற 8-ஆம் தேதி மீண்டும் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை அவர் பாகிஸ்தான் வரக்கூடாது என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னதாக அவசர நிலைக்கு பெனாசீர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். நாட்டின் இறையாண்மைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரான எந்தவொரு நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
எதிர்ப்பை மீறி அவசர நிலை அறிவிக்கப்பட்டால் தனது கட்சியின் தொண்டர்கள் தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாற்றில் சிக்கி வெளிநாட்டில் தங்கியிருந்த பெனாசீர் புட்டோ கடந்த மாதம் 18-ஆம் தேதி பாகிஸ்தான் திரும்பினார். அப்போது அவரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் தப்பிய பெனாசீருக்கு இன்னும் அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் வந்து கொண்டுள்ளன. இதற்கு முஷாரஃப் அரசுதான் காரணம் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி குற்றம் சாற்றியுள்ளது.