மொபைலில் ரிங்டோன்களைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது என்று தாலிபான் ஆதரவுத் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இஸ்லாம் மதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கையைச் செய்தால் வெடிகுண்டுகள் வீசப்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
பாகிஸ்தானில் வடமேற்கு மாநிலங்களில் தாலிபான் ஆதரவுத் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
பஜாவுர் என்ற பழங்குடியினர் மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் மீது கடுமையான அடக்குமுறைகள் திணிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சந்தைகளில் நுழைந்த தீவிரவாதிகள், இஸ்லாமியச் சட்டங்களை மீறி வியாபாரம் செய்யக் கூடாது என்று மிரட்டினர். மீறினால் வெடிகுண்டுத் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தனர்.
முக்கிய நகரமான காருக்கு அருகில் உள்ள இனயத் காலே என்ற வணிகப் பகுதியில் மொபைல் ஃபோன் கடைகளின் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் 30 கடைகள் சேதமடைந்தன.
தாலிபான் ஆதரவுத் தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு பயந்துள்ள கடைக்காரர்கள் ரிங்டோன்களை பதிவிறக்கம் செய்வதற்குத் தடை விதித்துள்ளனர். மீறினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கடைக்காரர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தவிர சிடிகளில் பாடல்களைப் பதிவு செய்யக் கூடாது, திரைப்படங்களைப் பார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் உள்ளன.
சில இடங்களில் தீவிரவாதிகள் தங்களுக்கான காவலர்களையும் நியமித்துள்ளனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளிடமும், பெண் ஆசிரியர்களிடமும் வெடிகுண்டைக் காட்டி தீவிரவாதிகள் மிரட்டுகின்றனர்.
வீட்டைவிட்டு வெளியில் வந்தால் பாலியல் குற்றம் சுமத்துவோம் என்றும் எச்சரிக்கின்றனர். ஆப்கன் எல்லையில் உள்ள வடமேற்குப் பகுதியில் பாகிஸ்தான் அரசின் எந்தச் சட்டமும் செல்லுபடியாவதில்லை.
இங்கு அதிகரித்துவரும் இஸ்லாமியத் தீவிரவாதத்தைஅடக்க ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.