மேட்ரிட் நகரத்தில் நடந்த ரயில் குண்டு வெடிப்பில் குற்றம்சாற்றப்பட்ட மூன்று பேருக்கு 34,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 -ஆம் ஆண்டு ஸ்பெய்ன் நாட்டின் மேட்ரிட் நகரத்தில் நடந்த ரயில் குண்டுவெடிப்பில் 191 பேர் கொல்லப்பட்டனர். 1,800 பேர் படுகாயமடைந்தனர்.
ஐரோப்பாவில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதத் தாக்குதல்களில் மிகவும் மோசமான நிகழ்வாக இது கருதப்பட்டது. இது தொடர்பாக நூற்றுக்கணக்கானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இறுதியில் ஸ்பெய்னில் பதுங்கியிருந்த ஜாமல் செளகம், ஓத்மான் நாவ்ய், செளரெஸ் ட்ரெசாரஸ் ஆகிய மூன்று முக்கியக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இவர்களின் மீது கொலை முயற்சி, கொலை உள்ளிட்ட குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்டன.
ஸ்பெய்ன் தேசிய நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நேற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றவாளிகள் மூன்று பேருக்கும் 34,000 முதல் 43,000 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ஸ்பெய்ன் சட்டப்படி குற்றவாளிகளுக்கு மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ விதிக்க முடியாது. அதிகபட்சமாக 40 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கமுடியும்.
இவ்வழக்கில் மேலும் 4 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எகிப்தைச் சேர்ந்த ஒருவர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு இத்தாலிச் சிறையில் அடைக்கபபட்டுள்ளார்.