இலங்கை இனப் பிரச்சனைக்கு சிறிலங்கா அரசின் கொள்கைகளின்படி விரைவில் அரசியல் தீர்வு உருவாக்கப்படும் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொத்தலாவெல பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, ''இனப் பிரச்சனைக்கு பயங்கரவாதத்தின் மூலம் தீர்வுகாண முடியாது என்று வரலாறு நிரூபித்திருக்கிறது. அதற்கான அரசியல் தீர்வு அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய சபையின் முன்பு விரைவில் வைக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
மேலும், சிறிலங்கா ராணுவத்தினர் உலகிலேயே மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்தை எதிர்த்துப் போராடுவதுடன், மனிதாபிமான அடிப்படையிலான போரையும் நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிலங்க அரசின் மனித உரிமைகள் ஆணையம் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. அரசமைப்புகள் மூலம் மறுசீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
சிறிலங்காவில் மனித உரிமைகளை ஆய்வு செய்ய சர்வதேச மனித உரிமை ஆணையங்களுக்கு எல்லா அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் விசாரணைகளை மேற்கொள்ளலாம்.
அதேபோல எந்தப் பிரச்சனையிலும் அரசை விமர்சிக்க ஊடகங்களுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று மகிந்த ராஜபக்ச கூறினார்.