பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் தங்கள் நடவடிக்கைகளைக் கைவிடவில்லை என்றால் அவர்கள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் எச்சரித்துள்ளார்.
இன்று இஸ்லாமாபாத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அதிபர் முஷாரஃப், பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கவில்லை என்றால், அது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்திவிடும் என்றார்.
ஸ்வாத் பகுதியில் சண்டையிடும் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த அரசு முயற்சித்து வருகிறது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைக் கைவிடவில்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முஷாரஃப் எச்சரித்தார்.
ராவல்பிண்டியில் நேற்று அதிபர் முஷாரஃபின் அலுவலகத்திற்கு அருகில் தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். 28 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இந்தவாரத்தில் இன்னும் இரண்டு தாக்குதல்களை நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.