சிறிலங்க அரசு உருவாக்கியுள்ள வன்முறைக்கு எதிரான சட்டத்தில் குற்றங்களுக்கு கூறப்படும் காரணங்கள் குற்றங்களை ஊக்குவிப்பதாக உள்ளதால் அந்நாட்டில் மனித உரிமை மீறல்கள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன என்று ஐ.நா குற்றம்சாற்றியுள்ளது.
சிறிலங்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் சிறப்பு பிரதிநிதி மன்பிரட் நோவாக் தெரிவித்த விவரங்கள் வருமாறு:
கடந்த 1-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை சிறிலங்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அப்போது அங்குள்ள சிறைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ளவர்களிடம் இருந்து அதிகளவிலான புகார்களைப் பெற்றேன்.
அதில் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரும், ராணுவத்தினரும் தங்களை மிகவும் கொடுமைப்படுத்துவதாகத் தெரிவித்திருந்தனர்.
கடந்த 1994-ஆம் ஆண்டு சிறிலங்கா அரசு உருவாக்கிய வன்முறைகளுக்கு எதிரான சட்டத்தில் சித்ரவதைகள் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதில் குற்றங்களுக்காகக் கூறப்படும் காரணங்கள் பல குற்றச் செயலை ஊக்குவிப்பதாகவே உள்ளன. இதுவரை அச்சட்டத்தின் கீழ் 3 பேர் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்றங்களில் வன்முறைகள் தொடர்பாகத் தொடரப்படும் வழக்குகளில் போதிய ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் குற்றங்களுக்கான காரணங்களைக் கருத்தில் கொள்ளும்போது குற்றவாளிகளை நீதிமன்றங்களால் தண்டிக்க முடிவதில்லை என்பது வருத்தத்திற்கு உரியது.
சிறைகளில் நெருக்கடி அதிகரித்துள்ளது. குற்றவாளிகளைவிட விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 8,200 பேர் கொள்ளளவு கொண்ட சிறையில் 28,000 பேர் அடைத்து வைக்கப்பட்டுளளனர்.
குற்றம் நிரூபிக்கப்படும் அதிகாரிகளைப் பதவியிலிருந்து நீக்குவதாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களைப் பதவி நீக்குவதுடன் சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. சிறிலங்காவின் தேசிய மனித உரிமை ஆணைக்குழுவிற்கு நாள்தோறும் புகார்கள் வருகின்றன. இது நாடு முழுவதும் நிலைமை மோசமாகி வருவதையே காட்டுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.