நாடு முழுவதும் ராணுவ ஆட்சியைக் கொண்டுவர சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்புகிறார் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாற்றியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அனுராதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் பி.பி.சி நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:
அனுராதபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவதையும் ராணுவத்திடம் சிறிலங்கா அரசு ஒப்படைத்துள்ளது. இதன்முலம் ராணுவ ஆட்சியை அதிபர் மகிந்த ராஜபக்ச விரும்புகிறார் என்பது தெளிவாகிறது.
குருநாகல், கண்டி போன்ற பகுதிகளில் தாக்குதல் நடைபெற்றால் அவற்றின் பாதுகாப்பும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும். அதன்மூலம் படிப்படியாக நாடு முழுவதையும் ராணுவத்தின் கீழ் கொண்டுவரும் ஆபத்து உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போராட்டத்தில் சிறிலங்கா தரப்புக்கு எந்தவொரு குறிப்பிடத்தக்க வெற்றியும் கிடைக்கவில்லை.
இனப்பிரச்சனைகளுக்கு பேச்சின் மூலமே தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரியவில்லை என்றார் அவர்.