நைஜீரியாவில் கடத்தப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு இந்தியர்களும் பத்திரமாக உள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நைஜீரிய அதிகாரிகளுடன் அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்பு கொண்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சார்னா தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நேற்றுச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியர்கள் பணிபுரிந்த இத்தாலிய நிறுவனம் கடத்தல்காரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று தெரிவித்தார்.
நைஜீரியாவில் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட நான்கு இந்தியர்கள் தீவிரவாதிகளால் நடுக்கடலில் கடத்திச் செல்லப்பட்டனர்.
அந்தத் தீவிரவாதிகள் சுமார் ரூ.250 கோடி பணயத்தொகை கேட்டு மிரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மன்மோகன் சிங், நைஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்ட இருவாரங்களுக்குள் இந்த கடத்தல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அப்போது நைஜீரிய அதிபர் அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமரிடம் உறுதி அளித்திருந்தார்.