அப்பாவி முஸ்லிம்களை இரக்கமின்றிக் கொல்லும் தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்த முடியாது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோ தெரிவித்துள்ளார்.
கராச்சியில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் பெனாசிர் உயிர்தப்பினார்.
அதன்பிறகு முதன்முறையாக லாகூரில் மக்களைச் சந்தித்த பெனாசிரிடம், தீவிரவாதிகளுடன் பேச்சு நடத்துவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், நாட்டின் சட்டங்களுக்குத் தீவிரவாதிகள் மதிப்பளிக்க வேண்டும்; ஆயுதங்களைத் தொடாதவர்களுடன் பேச்சு நடத்த நான் தயார் என்றார்.
மேலும், ''கடந்த 5 ஆண்டுகளில் முஷாரஃப் அரசு அளித்த வாய்ப்புகள்தான் வசிரிஸ்தான் மாகாணத்தில் வன்முறைகள் அதிகரிக்கக் காரணமாகும்.
அரசின் தவறான கொள்கைகளால் அப்பகுதியில் வன்முறைக் குழுக்கள் அதிகரித்து வருகின்றன.
ஒரு தெளிவான முடிவை முஷாரஃப் அரசு எடுக்கும்வரை பழங்குடியினர் பகுதிகள், ஸ்வாத் பகுதிகள் ஆகியவற்றில் பரவிவரும் வன்முறைகளைத் தடுக்க முடியாது.
பழங்குடியினர் பகுதிகளில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர்.
ஆனால், அப்பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கூட அரசிடம் மக்களின் கருத்தை வலியுறுத்தவில்லை என்பது வருத்தமளிக்கிறது.'' என்று பெனாசிர் கூறினார்.
அதிபர் முஷாரஃப்பை சந்திப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.