சீனாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் உண்மையிலேயே பிரம்மிக்கத் தக்கவையாகவும், மிகச் சிறப்பானதாகவும் உள்ளன; அவற்றிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 5 நாள் பயணமாகச் சீனா சென்றுள்ளார். தலைநகர் பெய்ஜிங்கில், ஆளும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் பங்கேற்றுப் பேசினார். அதில் அவர் கூறிய கருத்துகளின் விவரம் வருமாறு:
கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் சீனா பொருளாதாரச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அப்போதிருந்து சீனாவில் ஏற்பட்டு வரும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி இந்திய மக்களை ஈர்த்து வருகிறது.
சீனாவில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பிரம்மிக்கத் தக்கதாகவும், ஒப்பிட முடியாத வகையிலும் உள்ளது.
சிக்கலான நிலையில் வளர்ந்துவரும் அரசியல் சூழ்நிலைகள், சவால்கள் ஆகியவற்றுக்கு இடையில், தனது பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவிற்கு உள்ளது.
எதார்த்தத்தோடும், தெளிவான பார்வையோடும், கடினமான முயற்சியும் இருந்தால் சாதிக்க முடியும் என்று சீனா உலகத்திற்குக் காட்டியுள்ளது.
இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளிலும் சாதாரண மக்களின் பிரச்சனை முக்கியமானதாக உள்ளது.
எனவே, பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் தாராளமயத்தை நீங்கள் அணுகிய முறையிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்று நான் நம்புகிறேன்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சக்திமிக்க நாடுகளான சீனா, இந்தியா ஆகியவற்றின் மறு ஆக்கத்தை உலகம் ஒப்புக் கொள்ளத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இருநாடுகளும் நட்பு பாராட்டி ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும். உலகம் மிகப்பெரியது என்ற கோணத்தில் நமது வளர்ச்சி மற்றும் குறிக்கோள்கள் நிறைவேற இது மிகவும் அவசியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும், ''எதார்த்தமும் இருதரப்பு தன்னலனும்'' என்ற அடிப்படையிலான கருத்துகளையும் சோனியா தெரிவித்தார்.