பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப்புக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில் வருகிற நவம்பர் 1-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானில் ராணுவத் தளபதி பொறுப்பில் உள்ள அதிபர் பர்வேஷ் முஷாரஃப் சட்டப்படி மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை நீதிபதி ஜெவெத் இக்பால் தலைமையிலான 11 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
இதற்கிடையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முஷாரஃப் மீண்டும் வெற்றி பெற்றார். எனவே வழக்கின் தீர்ப்பு பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தீர்ப்பு அனேகமாக வருகிற நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகக் கூடும் என்று நீதிபதி இக்பால் தெரிவித்துள்ளார்.
நீதித்துறை சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா என்று நீதிபதி இக்பாலிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், '' நீதித்துறை சுதந்திரமாக இருந்தது. சுதந்திரமாக இருக்கும். நாங்கள் நீதிபதிகளாக அல்லாவிற்கு மட்டுமே பதிலளிக்கக் கடமைப்பட்டவர்கள். பிறகு குறிப்பிட்ட பிரிவு மக்களுக்கு அல்லாமல் எங்கள் மனசாட்சிக்கு'' என்றார்.
மேலும்,''முஷாரஃப் வழக்கில் சட்டபடியான தீர்ப்பு வழங்கப்படும்'' என்றும் அவர் தெரிவித்தார்.