பாகிஸ்தானில் திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப், பிரதமர் சவ்கத் அஜீஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் வருகிற டிசம்பர் மாதம் பொதுத் தேர்தலை நடத்தலாம் என்று அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ற நடவடிக்கைகளும் தொடங்கியுள்ளன.
இதற்கிடையில், முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ நாடு திரும்பியது முதல் அவரைக் குறிவைத்து வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.
எனவே பாதுகாப்புக் காரணங்களுக்காக புதிய அரசியல் ஒழுங்கு முறைகளை பாகிஸ்தான் அரசு உருவாக்கி வருகிறது.
இதன்படி பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்ற கருத்து பரவலான நிலவியது.
இந்நிலையில் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப், பிரதமர் சவ்கத் அஜீஸ் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
சட்டம்- ஒழுங்கு, பொதுத் தேர்தல், அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்ட முஷாரஃப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு, உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சிக்கல்கள் பற்றி இருவரும் விரிவாக விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், நாட்டில் திட்டமிட்டபடி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
மேலும், நாட்டில் சட்டம், ஒழுங்கை அமைதி குலையாமல் கட்டிக்காப்பதில் அரசு உறுதியுடன் செயல்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பழங்குடியினர் பகுதியில் பதுங்கியிருக்கும் தலிபான்கள் தங்களின் ஆயுதங்களைக் கைவிட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முஷாரஃப் எச்சரிக்கை விடுத்தார்.
அதிபர் தேர்தல் விவகாரத்தில் நாடாளுமன்றம் எடுத்த முடிவின் அடிப்படை உண்மைகளை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், நீதிமன்றத்தின் எந்த முடிவுக்கும் தான் கட்டுப்படுவதாகவும் அவர் கூறினார்.