விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு சிறிலங்கா அரசு அதிக முன்னுரிமை அளிக்கும் என்று அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜ பக்ச கூறியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச, கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகையான டெய்லி மிரருக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:
அநுராதபுரம் விமானப் படைத் தளத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த விசயத்தில் பல்வேறு நாடுகள் எங்களுக்கு உதவுவதாகத் தெரிவித்துள்ளன. சில காரணங்களால் அந்த நாடுகளின் பெயர்களை வெளியிட இயலாது.
சிறிலங்கா அரசானது தனது எல்லாப் பணிகளையும்விட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு முன்னுரிமை அளிக்கும். விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் வரை இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க முடியாது.
விடுதலைப் புலிகள் தங்களது இலக்கை அடைவதற்காக மீண்டும் தாக்குதல்களை நடத்தக்கூடும். பொதுமக்கள் இதனை உணர்ந்து எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அநுராதபுரம் தாக்குதலுக்கு பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் உதவி செய்துள்ளனரா என்பது பற்றிய விசாரணைகள் நடந்து வருகின்றன என்றார் பசில் ராஜபக்ச.
இதற்கிடையில், சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புச் சபையில் புதிய விமானங்களை வாங்குவது குறித்த ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன.
இக் கூட்டத்தில் பிரதமர் ரத்ணசிறி விக்கிரமநாயக்க, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, விமானப் படைத்தளபதி றொசான் குணதிலக்க, ராணுவ உயரதிகாரி டொனால்ட் பெரேரா, காவல்துறை தலைவர் விக்ரர் பெரேரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விடுதலைப் புலிகளின் தாக்குதலில் ஏற்பட்ட இழப்புக்கள் குறித்த விரிவான அறிக்கையை விமானப் படைத்தளபதி அக்கூட்டத்தில் தாக்கல் செய்தார்.