விடுதலைப் புலிகளின் தோல்வியைப் பொறுத்து மக்களின் விடுதலை உள்ளது. அதை யாராலும் தடுத்துவிட முடியாது என்றும் பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தீவிரமாகச் செயல்படுவோம் என்றும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
அநுராதபுரம் தாக்குதலுக்குப் பிறகு மகிந்த ராஜபக்ச முதல் முறையாகத் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:
ராணுவம் மற்றும் காவல்துறையினர் இந்த விசயத்தில் தேவையான எச்சரிக்கையுடன் இருக்கவில்லை. அவர்களுக்கு மக்களின் ஆதரவு தேவை. பொதுமக்கள் தங்களது கண்களைத் திறந்து வைத்திருக்க வேண்டும்.
சிலர் இதனை விரும்பவில்லை. புலிகள் தாக்குதல் நடத்தினால் இந்த அரசாங்கம் கவிழும் என்று நினைக்கின்றனர். அது தவறானது.
விடுதலைப் புலிகளின் தோல்வியைப் பொறுத்து மக்களின் விடுதலை உள்ளது. அதை யாராலும் தடுத்துவிட முடியாது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் தீவிரமாகச் செயல்படுவோம்.
நாங்கள் சிலாவத்துறையை விடுவித்தோம். வன்னியில் நடவடிக்கைகளை மேற்கொண்டோம். நீண்டகால பொறுமைக்குப் பின்னர்தான் நாங்கள் தாக்குதல் நடத்தச் சென்றோம்.
பேச்சுக்களின் மூலம் தீர்வு காணப்படாத நிலையில்தான் தாக்குதல் நடத்தினோம். ஆனால் புலிகள் அனைத்துப் பேச்சுக்களையும் சீர்குலைத்தனர்.
சில நேரங்களில் ஊடகங்கள் பொறுப்புணர்வின்றி செயல்படுகின்றன. அவர்கள் இந்த நாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை. சிலர் தங்களது அரசியலுக்காக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.
நாங்கள் இன்னும் பொறுமையாக இருக்கிறோம். இந்தத் தாக்குதல்கள் எல்லாம் பிரச்சனை இல்லை. நாங்கள் பயப்படவில்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடக்கக் கூடாது என்றார் மகிந்த ராஜபக்ச.