சிறிலங்காவில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அரசு அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்காவின் அயலுறவு செயலாளர் சீன் மெக்கார்மக் கூறியதாவது:
சிறிலங்காவில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூய்ஸ் ஹார்பர் விசாரணை நடத்தினார்.
சிறைச்சாலைகள், பொது மக்களின் குடியிருப்புகள், பதற்றமான பகுதிகள் எனப் பல்வேறு இடங்களிலும் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்பதபிறகு, 'மனித உரிமைகள் மிகவும் சீர்குலைந்து போயுள்ளன' என்று லூய்ஸ் ஹார்பர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களைத் தடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய சட்டப்படியான நடவடிக்கைகளை அரசு சரிவர எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாற்றியுள்ளார்.
இந்நிலையில் சிறிலங்காவில் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பது அவசியமாகும்.
குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தவும் அது உதவும்.
எனவே ஐ.நா மூலம் அமைக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவினை சிறிலங்கா அரசு அனுமதிக்க வேண்டும். தனது நிலையை மாற்றிக் கொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.