பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல் கட்சிகளின் பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்குத் தடைவிதிக்க பாகிஸ்தான் அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு பெனாசீர் புட்டோ எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவைக் குறிவைத்து கராச்சியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 165 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்த பாகிஸ்தான் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொதுத் தேர்தலை அமைதியாக நடத்தவேண்டும் என்பதற்காக அரசியல் கட்சிகளின் பேரணிகள், பொதுக் கூட்டங்களுக்குத் தடைவிதிக்கலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து விமர்சித்த பெனாசீர், ''அரசு தவறான முடிவை எடுக்கப்போகிறது என்று நாங்கள் கருதுகிறோம். அவ்வாறு செய்யக் கூடாது என்று ஆலோசனை தர நாங்கள் விரும்புகிறோம்'' என்றார்.
'எல்லாத் தேர்தல் பிரச்சாரங்களிலும் பேரணி முக்கியமானது. அதற்குத் தடைவிதிப்பதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் தேட அதிபர் முயற்சிக்கிறார்' என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி கூறியுள்ளது.
முன்னதாக, 'பொதுத் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என்று அரச விரும்புகிறது. இதற்காக புதிய ஒழங்கு விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் பேரணிகள், பொதுக் கூட்டத்திற்குத் தடைவிதிப்பதும் அடக்கம் என்று உள் விவகார அமைச்சர் அஃதாப் அகமது கான் செரபாவோ' தெரிவித்தார்.