இந்தியாவுடன் நடைபெற்றுவரும் பயங்கரவாத எதிர்ப்புப் பேச்சுநல்லமுறையில் உள்ளன என்றும், இருதரப்பிற்கும் இடையிலான நல்லுறவு கடந்த 60 ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது வலுவாக உள்ளது என்றும் பாகிஸ்தான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் பேச்சுகள் நேற்றுத் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அயலுறவு அலுவலகம், ''இருதரப்புப் பேச்சுகளும் முன்னேற்றம் அளிக்கும் வகையில் நடந்து வருகின்றன'' என்று கூறியுள்ளது.
மேலும்,'' இந்தியா- பாகிஸ்தான் இடையில் கடந்த 60 ஆண்டுகளில் இதுபோன்ற நல்லுறவு ஏற்பட்டதில்லை. இருந்தாலும் பேச்சுக்களின் முடிவுகளை ஒரே இரவில் எதிர்பார்க்க முடியாது'' என்று அயலுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகமது சாதிக் கூறினார்.
''இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் நிலவும் உள்நாட்டு அரசியல் நிகழ்வுகள் இருதரப்புப் பேச்சை பாதிக்காது.
இருதரப்புக்கும் இடையில் உள்ள சிக்கலான உறவுகள்தான் அமைதிப் பேச்சு தாமதமாக நடைபெறுவதற்குக் காரணம்.
இருந்தாலும், அமைதி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தை கவனித்து வருகிறோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
ஈரான்- பாகிஸ்தான் - இந்தியா இடையிலான குழாய் எரிவாயுத் திட்டம் விரைவில் நிறைவேறும் என்று தான் நம்புவதாக சாதிக் தெரிவித்தார்.