இத்தாலி நாட்டில் மாஃபியா கொள்ளைக் கும்பலின் ஒரு ஆண்டு பணப்புழக்கம் 4 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது, இது அந்நாட்டின் சிறிய, நடுத்தர மற்றும் பெரிய வர்த்தக நிறுவனங்களை நடுநடுங்கச் செய்து வருகிறது,
இத்தாலி நாட்டில் மிகப்பெரிய தொழிலாக மாஃபியா (கட்டுக்கோப்பாக செயல்படும் அச்சுறுத்தல் கும்பல்) வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் ஆண்டு வர்த்தகம் 120 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது 4.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை அந்நாட்டின் முன்னணி விற்பனையாளர் கூட்டமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது,
இத்தாலி நாட்டின் மொத்த நகர உள்நாட்டு உற்பத்தியை 7 விழுக்காடு அளவுக்கு மாஃபியா கும்பல்கள் தடுத்து நிறுத்தி விடுவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது,
சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகள் வரை மாஃபியா கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அறிக்கை, அது குறித்து தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளது,
இத்தாலியின் முக்கிய துறைகளிலும் இந்தக் கும்பல்களின் திட்டமிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது.
வர்த்தக நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் போடுவதற்கு மாஃபியா கும்பல்களை அணுகி அவற்றின் ஆதரவோடு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது,
இத்தாலியில் 20 விழுக்காடு கடைகள் தங்களின் தொழில் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாஃபியாக்களுக்கு மாமூல் வழங்கி வருகின்றனர்,
மாஃபியா கும்பல்களின் வளர்ச்சி தற்போது பெரும் அச்சுறுத்தலை அரசுக்கு உருவாக்கியுள்ளதாக அந்நாட்டு உள்துறை இணை அமைச்சர் மேக்ரோ மினிட்டியும் தெரிவித்துள்ளார்.