இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையில் இரண்டாவது கட்ட பயங்கரவாத எதிர்ப்புப் பேச்சுக்கள் இன்று தொடங்கின.
பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
ஹைதராபாத், மும்பை, லூதியானா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு உள்ள தொடர்புகள் பற்றிப் பல்வேறு தகவல்களை இந்தியா பாகிஸ்தானிடம் கொடுத்துள்ளது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகவோ, பயங்கரவாதிகளை பாகிஸ்தான் கைது செய்துள்ளதாகவோ தகவல் எதுவும் இல்லை.
இதற்கிடையில், கராச்சியில் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோ பங்கேற்ற ஊர்வலத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 165 க்கும் மேற்பட்டவர்கள் பலியாயினர். 500 -க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
இத்தகைய நெருக்கடியான சூழலில் இருநாடுகளுக்கு இடையிலான பயங்கரவாத எதிர்ப்புப் பேச்சுக்கள் புதுடெல்லியில் இன்று தொடங்கியுள்ளது.
இதில் இந்தியாவின் அயலுறவுஅமைச்சகத்தின் செயலர் கே.சி.சிங், பாகிஸ்தான் அயலுறவு அமைச்சகத்தின் செயலர் காலித் ஆஷிஷ் பாபர் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற முதல்கட்டப் பேச்சிற்குப் பிறகு நடைபெற்ற முன்னேற்றங்கள், தகவல் பரிமாற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இன்று விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.
கடந்த 2006 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 -ஆம் தேதி ஹவானாவில் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் ஆகியோர் சந்தித்துப் பேசிய பிறகு, இந்த பயங்கரவாத எதிர்ப்புக் குழு உருவாக்கப்பட்டது.