உலகம் வெப்பமயமாதல் நிகழ்வால் கடல்மட்டம் உயர்ந்து வருகிறது என்றும், மும்பை, கராச்சி உள்ளிட்ட 21 மிகப்பெரிய நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
காற்றில் அதிகரித்து வரும் மாசினால் உலகத்தின் மேற்பரப்பு வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது இயற்கையின் செயல்பாட்டில் பல்வேறு விளைவுகளை உருவாக்கி வருகிறது.
புவியின் துருவப் பகுதிகளில் உறைந்து கிடக்கும் பனிப்பாறைகள் உருகத் தொடங்கியுள்ளன. இதன் விளைவாக பெருங்கடல்களின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
உலகம் வெப்பமயமாதல் நிகழ்வினால் ஏற்படும் பருவநிலை மாற்றங்களை ஆய்வாளர்கள் தொடர்ந்து ஆய்வுசெய்து வருகின்றனர். பேரழிவில் இருந்து தப்பிப்பதற்காகச் சில வழிமுறைகளையும் வழங்கியுள்ளனர்.
ஆஸ்ட்ரேலியாவில் உள்ள உலக கண்காணிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடல்மட்ட உயர்வு விகிதத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
''2007-இல் உலகின் நிலை: நமது நகர்ப்புறத்தின் எதிர்காலம்'' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
அதில், ''பருவநிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் விளைவுகளை உலகத்தின் சில பகுதிகள் உணரத் தொடங்கியுள்ளன
கடந்த நூற்றாண்டில் பெருங்கடல்களின் நீர்மட்டம் 9 முதல் 20 செ.மீ வரை உயர்ந்துள்ளது. இதனால் தீவு நாடுகள் பல கரையறிப்பு அபாயத்தில் சிக்கியுள்ளன.
வருகிற 2100 -ஆம் ஆண்டிற்குள் கடல்மட்டம் 88 செ.மீ உயரும். இதில் பல பெரிய நகரங்கள் பாதிக்கப்படக் கூடும்.
மும்பை, கராச்சி, நியூயார்க், லாஸ் ஏன்ஜல்ஸ், டோக்கியோ, பாங்காங், ஜகார்த்தா. பியூனோஸ் எய்ரெஸ், ரியோ டி ஜெனிரோ, சாங்காய், கெய்ரோ ஆகிய நகரங்கள் பாதிக்கப்படும் நகரங்களின் பட்டியலில் முதல் 21 இடங்களைப் பிடித்துள்ளன'' என்று ஆய்வாளர் ஜியோ சேஃப் தெரிவித்துள்ளார்.
மேலும், ''முன்பு இயற்கைச் சீற்றங்கள் அரிதாக நடந்தன. எதிர்பாராத சோகங்களை ஏற்படுத்தின.
தற்போது இயற்கைச் சீற்றங்கள் அடிக்கடி நடக்கின்றன. முன்பிருந்ததைவிட அதிகமான பொருளாதரச் சேதங்களையும், உயிரிழப்புகளையும் அவை ஏற்படுத்துகின்றன.
எனவே குறிப்பிட்ட நகரங்களில் பேரழிவைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கடற்கரைகளில் தடுப்புச் சுவர்களைக் கட்ட வேண்டும்.
அதிகாரமிக்க அரசுகள் உடனடியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்'' என்றும் அவர் கூறியுள்ளார்.