பெனாசீர் புட்டோவைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி மூன்று நாட்கள் நாடுதழுவிய துக்கம் அனுசரிக்கிறது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய பெனாசீர் புட்டோவுக்கு அவர் சார்ந்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவாளர்கள் வரவேற்பளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பெனாசீரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சில நிமிடங்கள் இடைவெளியில் நடைபெற்ற இரண்டு குண்டு வெடிப்புகளில் 165 பேர் பலியானார்கள். 450-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள்.
இத்தாக்குதலில் மயிரிழையில் உயிர்தப்பிய பெனாசீர் புட்டோ, பாதுகாப்பாக அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சில நாட்களுக்கு வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், நாடு முழுவதும் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி அறிவித்துள்ளது. கட்சிக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் என்றும், கருப்புக் கொடிகள் ஏற்றப்படும் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.