வெடிகுண்டுத் தாக்குதலில் உயிர்தப்பிய பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவை இந்தியத் தூதர் சத்யபிரதா பால் சந்தித்தார்.
பயங்கரவாதம் எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிர்த்து பெனாசீருடன் இணைந்து போராட இந்தியா தயாராக உள்ளது என்று அப்போது அவர் தெரிவித்தார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு திரும்பிய பெனாசீர் புட்டோவைக் குறிவைத்து நேற்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 165 பேர் பலியானார்கள். 450 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியா உடனடியாகக் கடும் கண்டனம் தெரிவித்தது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதர் சத்யபிரதா பால், கராச்சி சென்று பெனாசீர் புட்டோவைச் சந்தித்தார்.
அப்போது, '' உங்களின் பயணத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவிகள் பலியானதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். உங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலரும் படுகாயமடைந்தனர் என்றறிந்து வருத்தமடைந்தோம். நீங்கள் காயமின்றித் தப்பினீர்கள் என்பதை அறிந்ததும் நிம்மதியடைந்தோம்.
தெற்காசியாவில் உள்ள நம் அனைவருக்கும் பயங்கரவாதம் ஒரு பொதுவான சவாலாக உள்ளது. எனவே பயங்கரவாதத்தின் எல்லா வடிவங்களையும் எதிர்ப்பதற்காக உங்களுடன் இணைந்து போராட நாங்கள் தயாராக உள்ளோம்'' என்று சத்யபிரதா பால் தெரிவித்தார்.
அத்வானி கண்டனம்!
பெனாசசீர் புட்டோவைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியை அளித்துள்ளதாக பா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறியுள்ளார்.
'ஜனநாயகம் மீண்டும் வந்துள்ளது' என்று கருதி பெனாசீரின் ஆதரவாளர்கள் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பயங்கரவாதிகள் விரும்பியுள்ளனர்.
தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் துக்கங்களில் இந்திய மக்களுடன் இணைந்து நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்திற்கான போரட்டமும் பயங்கரவாத எதிர்ப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதையே நேற்றைய தாக்குதல் காட்டுகிறது என்று அத்வானி தெரிவித்தார்.
மேலும், பாகிஸ்தானில் நிலையான ஜனநாயகபூர்வமான அரசு அமைய வேண்டும். இருநாடுகளின் முன்னேற்றம், அமைதி ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் இந்திய பாகிஸ்தான் உறவுகள் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.