'என்னைக் கொல்ல முயன்றவர்கள் முஸ்லிம்கள் அல்ல' என்றும், 'முஸ்லிம்கள் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள்' என்றும் பெனாசீர் புட்டோ கூறியுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலுக்குப் பிறகு இன்று மாலை முதன் முதலாக தனது ஆதரவாளர்களைச் சந்தித்த பெனாசீர் புட்டோ பேசியது வருமாறு:
''வெடிகுண்டுத் தாக்குதலில் நான் உயிர் பிழைத்தற்காக கடவுளுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். அதேநேரத்தில் ஏராளமான தொண்டர்கள் பலியாகியுள்ளனர். அவர்கள் கட்சிக்காகத் தங்களின் வாழ்க்கையைத் தியாகம் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் இதில் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பயங்கரவாதிகள் முதலில் காவல்துறையினரின் வாகனங்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த காவலர்கள் பலியானது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அரசை நான் குற்றம் சொல்லவில்லை. தாக்குதல் குறித்த முழுமையான விசாரணை அறிக்கைக்காக நான் காத்திருக்கிறேன்.
என்னைக் கொல்லத் திட்டமிட்டவர்கள் முஸ்லிம்கள் அல்ல. ஏனேனில் முஸ்லிம்கள் இப்படியோரு காரியத்தைச் செய்ய மாட்டார்கள்.
கராச்சியில் ஊர்வலம் நடைபெற்ற பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை. விளக்குகளின் மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன. அது ஏன் என்று தெரிய வேண்டும்.
அந்த விளக்குகள் இருந்திருந்தால் தற்கொலைப்படைபயங்கரவாதிகளை அடையாளம் கண்டிருக்க முடியும். இருட்டிற்கு இடையில் அது முடியாமல் போய்விட்டது.
இந்தத் தாக்குதலுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். உலகம் முழுவதும் இருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன.
எனக்கும் நிறைய மின்னஞ்சல்கள், தொலைபேசிகள் வந்துள்ளன. தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்த அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்'' இவ்வாறு புட்டோ குறிப்பிட்டார்.
இதற்கிடையில் கராச்சி காவல்துறையினர் இடைக்கால விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் தாக்குதலுக்குப் பின்னால் அல் கய்டா இயக்கம் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.